தொடர்பு சாதனங்கள் பற்றிய புரிதல் மக்களிடத்தில் தெளிவாக இருக்க வேண்டும். இல்லையேல் அவை மக்களை தம் வழி ஈர்த்து எங்கேயோ கொண்டு சென்றுவிடும். அதனை தெளிவுறுத்துவதாகவே இக்கட்டுரை அமைகிறது..

இன்றைய மனித சமுதாயத்தில் எமது வாழ்வோடு மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பவை தகவல் தொடர்பு சாதனங்களாகும். இவ்வகையில் வெகுஜன தொடர்பு சாதனங்களாக பத்திரிகைகள், புத்தகங்கள், சஞ்சிகைகள் போன்ற அச்சு சார்ந்த ஊடகங்களையும் வானொலி, தொலைக்காட்சி, கணணி, சினிமா போன்ற இலத்திரனியல் சார் ஊடகங்களையும் கூறிக்கொள்ளலாம். இவ்வாறான தொடர்பு சாதனங்கள் ஒருவித சமூக அமைப்பை கட்டிக்காப்பதில் மிகவும் வலிமையாகச் செயற்படுகின்றன.

இவை மேலைத்தேய நாடுகளைப் போலவே கீழைத்தேய நாடுகளிலும் மிகுந்த தாக்கம் செலுத்தி வருவதனை காணமுடிகிறது. இவ்வகையில் வெகுஜனத் தொடர்பு சாதனங்கள் சமூகத்தில் பல்வேறுபட்ட பணிகளை ஆற்றி வருகின்றன. அவற்றில் தகவல்களை அளித்தல் பொழுது போக்கு எனும் வழக்கமான பணிகளையும் மீறி பொதுக்கருத்தை உருவாக்குவதிலும் முக்கிய பங்காற்றுகின்றன.

இருபத்தொராம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் பொறியினை அழுத்தித் தொழில் புரியும் நவீன உலகின் தன்மைக்கேற்ப எமது வாழ்க்கை முறைகளையும் மாற்றியமைத்துக் கொள்வது அவசியமாகும். அவ்வாறாக செயற்படும் போது தொடர்பு சாதனங்களானது நமது வாழ்க்கையில் எப்படியோ நுழைந்து விடுகின்றன. எனவே, நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவற்றை பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றோம். ஆகவே, தொடர்பு சாதனமானது சமூகமயமாக்கம், சமூகமாற்றம் என்பவற்றில் மிகுந்த செல்வாக்கினைச் செலுத்துகின்றன.

இச்சாதனங்கள் மூலம்தான் அரசியல், பொருளாதாரம், மனித நடவடிக்கைகள் என பல்வேறு விடயங்கள் சமூகத்தளத்தில் அலசப்படுகின்றன. அந்த வகையில் இச்சாதனங்கள் மக்களின் பொதுமன்றமாக ஜனநாயக அடிப்படைகளுள் ஒன்றாக செயற்படுகின்றன. அத்தோடு பல்வேறு விதமான தனிமனித மதிப்பீடுகளை உருவாக்குவதிலும், நிலை நிறுத்துவதிலும், நமது நடையுடை பாவனைகள், பேச்சு, உறவுமுறைகள் போன்றவற்றிலும், நமது நேரத்தை தீர்மானிப்பதிலும் இவற்றின் பங்கு குறிப்பிடத்தக்கவைகளாகும். அந்த வகையில் இத்தொடர்பு சாதனங்களின் பன்முகத்தாக்கம் அல்லது செல்வாக்கு உலகளாவிய ரீதியில் அனைத்து சமூகத்திலும் காணப்படுகின்றது.

பெருகிவரும் புதிய தொழில் நுட்பங்கள் மூலம் நினைத்தவுடன் அதே கணத்தில் செய்திகளையும் தகவல்களையும் அச்சாகவும் விம்பங்களாகவும எங்கு வேண்டுமானாலும் அனுப்பவும் பெறவும் முடிகிறது. தொடர்பூடகங்களானது உலகத்தை ஒன்றிணைத்து ஒரு கிராமமாக மாற்றி உலக சந்தைகளை உலக கலாசாரத்தை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிக்கின்றன.

மிக அதிகளவில் தொடர்பு சாதனங்கள் நம் வாழ்வில் ஊடுருவியிருக்கின்றன. செல்வந்தர்கள், வறியவர்கள், அந்தஸ்தில் உயர்ந்தவர்கள், படித்தவர்கள், பாமரர்கள் போன்ற வேறுபாடுகளின்றி அனைவருமே பயன்படுத்துகின்றனர். வாழ்க்கை முறைமையிலிருந்து பிரிக்க முடியாத அம்சமாகிவிட்டது. இருந்த போதிலும் அந்தந்த சமூகத்தின் தன்மைகளுக்கும் கட்டமைப்புகளுக்கும் ஏற்ப இவற்றின் செல்வாக்கு மாறுபடுகின்றன.

விரும்பியோ விரும்பாமலோ பயன்படுத்த வேண்டிய கட்டாயச் சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ள மனிதனுக்கு பல்வேறுபட்ட விடயங்களை இடித்துரைக்கும் ஆற்றல் வாய்ந்த தொடர்பு சாதனங்கள் மக்களின் மனங்களை அசைய வைப்பதோடு சிதைய வைக்கும் தன்மையும் கொண்டவை. நம்மைப்பற்றி மற்றவர்களைப்பற்றி சமூகத்தைப்பற்றி ஏராளமான தரவுகளையும் தகவல்களையும் அறிவிப்பது மட்டுமன்றி அறிவுறுத்தும் ஆற்றலும் வாய்ந்த தொடர்புசாதனத்துறை தனிப்பெருந்துறையாக வளர்ச்சி கண்டுள்ளது. அதனால் சமூகத்தின் பல்வேறுபட்ட மட்டங்களிலும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்துவதோடு, தீர்மானங்களை முன்மொழியும் பாரிய சக்தியாகவும் விளங்குகின்றது.

ஒப்பீட்டளவில் பார்க்கும் போது இத்தொடர்பு சாதனங்களுள் தொலைக்காட்சி முக்கியமானதொரு இடத்தினைப் பெறுகின்றது. ஏனைய தொடர்பூடகங்களைப் போலன்றி குரலொலி (Voice), தரவுகள் (Data), ஒளியுரு (Video) ஆகிய மூன்று முக்கியமான தொடர்பு முறைகளைக் கைக்கொண்டு கட்புல (ஒளி) செவிப்புல (ஒலி) சாதனமாக செயற்பட்டு சமூகத்தில் அதிக தாக்கத்தினை ஏற்படுத்துவது இதுவேயாகும்.

சமூகநிலையில் சகலர் மீதும் இச்சாதனங்கள் மிகுந்த தாக்கத்தினை ஏற்படுத்தி பாதிப்பினை உண்டுபண்ணுகின்றன. பல்வேறுபட்ட விடயங்களையும் இலகுவில் உள்வாங்கி மக்கள் மத்தியில் வெளிப்படுத்துவதால் அவர்கள் பல்வேறுபட்ட சிக்கல்களுக்கும் முரண்பாடுகளுக்கும் பிரச்சனைகளுக்கும் உள்ளாக வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இன்றைய சூழலில் பல தொலைக்காட்சி அலைவரிசைகள் ஏட்டிக்குப் போட்டியாக பல்வேறுபட்ட நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றன. அறிவியல் சார்ந்த பயனுள்ள நிகழ்ச்சிகள் சில ஒளிபரப்பப்படுகின்ற போதிலும் வர்த்தக நோக்கம் கருதிய நிகழ்ச்சிகளே மிகவும் அதிகமாக ஒளிபரப்பாகின்றன. அவை பெரும்பாலும் மக்களை இலகுவாகக் கவரும் களிப்பூட்டல் (Entertainment) நிகழ்ச்சிகளாகவே காணப்படுகின்றன. இவற்றில் அதிகமானவை உண்மைக்குப் புறம்பான மாயலோக காட்சிகளைக் கொண்டமைந்ததாகவும், யதார்த்தத்திற்கு மாறான தீர்மானங்களை காட்டுவதாகவும், வன்முறை, பலாத்காரம் நிறைந்ததாகவும் அமைந்துள்ளன.

இதன் விளைவாக மக்கள் தவறான நடத்தை முறைகளைக் கைக்கொள்ளவும் தவறான தீர்மானங்களை தேர்ந்தெடுக்கவும் வழிவகுக்கின்றன. குறிப்பாக சமூகத்தில் கொலை, கொள்ளை, தற்கொலை, பாலியல் பலாத்காரம், வன்முறைகள், போதைப் பொருள் பாவனை போன்ற சமூகப்பிறழ்வுகள் உருவாகுவதற்கும் உடல் உளரீதியான பாதிப்பு, உறவுநிலை ரீதியான பாதிப்பு, பிற நாகரீகத் தாக்கம், பிற பண்பாட்டுத்தாக்கம், பொருளாதார ரீதியான பாதிப்பு, பால்நிலை ரீதியான பாதிப்பு என்பவைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியும் உள்ளனர்.

சாதாரணமாக மக்கள் தமக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெறுவதற்கு அல்லது தீர்மானங்களை தேர்ந்தெடுப்பதற்கு மற்றவர்களை நாடுகின்றனர். அது நிறைவேறாத போது பெரியவர்கள் அல்லது துறைசார் அறிஞர்களிடம் கலந்தாலோசிக்காது ஊடகங்களினூடாக குறிப்பாக தொலைக்காட்சியில் தாம் கண்ட கேட்ட விடயங்களைக் கொண்டே தீர்மானங்களை எடுக்கின்றனர். பல சமயங்களில் அவை தமது சமூக சூழலுக்கும் நடத்தைகளுக்கும் பொருந்தாதவைகளாக அமைந்து விடுகின்றன. அதனால் இவர்கள் மென்மேலும் சிக்கல்களுக்குள் தள்ளப்படுகின்றனர்.

உலகலாவிய ரீதியில் நோக்கும் போது வெகுஜன தொடர்பூடகங்கள் தமக்கென தனித்துவமான இடத்தினை பெற்றிருப்பதோடு பல்வேறுபட்ட துறைகளிலும் தமது செல்வாக்கினையும் செலுத்தி வருகின்றது. இதன் காரணமாக அதனது போக்குகளும் தன்மைகளும் சமூகத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றன.

ஆகவே இவ்வாறானதோர் சூழலில் மக்கள் உகந்தவற்றை பின்பற்றவும் ஏனையவற்றை அதன் தன்மைகளுக்கேற்ப ஏற்றுக்கொள்ளவும் அல்லது புறந்தள்ளவும் தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது இத்தொடர்பு சாதனங்கள் குறித்த புரிதல் மக்கள் மத்தியில் தெளிவாக ஏற்பட வேண்டும். அதே போன்று இத்துறையில் பணியாற்றுபவர்களும் சமூக அறத்தை அறிந்து அவற்றின் அடிப்படையில் கடமையாற்ற வேண்டியவர்களாக உள்ளனர். இல்லையேல் பல்லின, மொழி, மதத்தினர் வாழும் இலங்கை போன்ற நாடுகளில் இச்சாதனங்களால் குழப்பங்களும் கலவரங்களும் தோன்றி அழிவுகளும் சீர்கேடுகளும் மேலோங்கிவிடும்.

எஸ். மோசேஸ்.