1983 ஆம் ஆண்டு தொடர்ந்த தமிழினப் படுகொலை அத்தியாயம் பல்வேறு தரப்பினராலும் பல்வேறு காலப்பகுதிகளிலும், வேறுபட்ட அணுகு முறையுடனும் முன்னெடுத்து வருகின்றனர். இதனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் கணவனைப் பலிகொடுத்த விதவைகள் 40,000 தாண்டியதுடன் தாய் தந்தையை இழந்த மழலைகளும், சிறுவர்களும் என பல நூற்றுக்கணக்கான பிள்ளைகள் வாழ வழியின்றி, போக்கிடமின்றி அல்லல் பட்டனர்.
இந்தச் சூழலின் தேவையை உணர்ந்த சமுதாய நேசிப்பாளர் சிலரின் அபராத உழைப்பினால் சிறுவர் இல்லங்கள் எனப்படும் தாய் தந்தையை இழந்து அல்லலுற்ற பல நூறு சிறார்களாலும் அதிக இழப்பின் அடிப்படையில் என தரப்படுத்தல் அடிப்படையில் தேர்ந்தெடுத்த சிறார்களை அரவணைத்து அவர்களுக்கு வேண்டிய கல்வி, உணவு, சுகாதாரம், போசாக்கு, இதர பழக்க வழக்கங்களை தங்களால் இயன்ற அளவு இச் சிறார்களுக்கு சமுதாயம் முன்னெடுத்தன. இதற்கு வேண்டிய நிதி மூலங்களைப் பெற்றுக் கொள்ள மார்க்கங்களாக எமது நாட்டில் நிற்கதியாக்கப்பட்டு வெளி நாடுகளுக்கு புலம் பெயர்ந்தோரிடம், வேலை வாய்ப்பு தேடிச் சென்றோரிடமும் விசேட காலங்களில் வீதி வீதியாக எண்ணைச் சிந்து பாடியும், காய் கறித் தோட்டங்களை அமைத்தும் ஓரளவு வருமானத்தை ஏற்படுத்திக் கொண்டனர். மிகுதியாக தேவைப்படும் உணவு பொருட்களும் அக் கிராமங்களில் இறந்தவர்களின் வீடுகளில் நடத்தப்படும் ஆண்டமுது (திவசம்) சடங்குகளில் இம் மாணவர்களின் பராமரிப்புக் கருதி உணவுப் பொருட்களை காணிக்கையாக வழங்கி வருகின்றனர்.
இவ்வாறான செயற்பாடுகளை முன்னின்று நடத்தி இச் சிறுவர் இல்லங்கள் மூலம் நாட்டின் சிறந்த பிரசைகளை உருவாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதனால் யுத்த்தினால் தாக்குண்டு தொலைந்து போன படுவான்கரைப் பிரதேசத்தில் ஆண், பெண் சிறுவர் இல்லங்கள் உருவாக்கப்பட்டன. அந்த வகையில் பழுகாமம் விபுலானந்தா ஆண்கள் சிறுவர் இல்லம், பழுகாமம் திலகவதியார் பெண்கள் இல்லம், பழுகாமம், இலண்டன் சிவன் கோயில் பெண்கள் இல்லம், பழுகாமம் செஞ்சோலை ஆண்கள் சிறுவர் இல்லம், கொக்கட்டிச்சோலை கதிரொழி அண்னர் இல்லம், கொக்கட்டிச் சோலை கதிரொழி பெண்னர் இல்லம் போன்ற பல சிறுவர் நலனோம்பு இல்லங்கள் பல்கிப் பெருகின. இதனால் இப்பிரதேசங்களில் காணப்பட்ட தாய், தந்தையை இழந்த பல நூறு சிறார்கள் இல்லங்களில் இணைத்துக்கொள்ளப்பட்டனர். இதனடிப்படையில் பழுகாமம் விபுலானந்தா சிறுவர் இல்லத்தில் 64 ஆண் சிறார்களும், பழுகாமம் கனகதுர்க்கை அம்மன் பெண்கள் இல்லத்தில் 68 சிறுமிகளும், பழுகாமம் செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் 50 ஆண்களும், கொக்கட்டிச்சோலை கதிரொளி இல்லத்தில் 70 ஆண், பெண் சிறாருமாக உள்ளீர்க்கப்பட்டனர். இதனால் இவர்களது தொலைந்த வாழ்வு மீண்டும் கட்டியெழுப்பப்பட்டது.
இப்பேற்பட்ட இயங்கு தளத்தில் உருவாக்கப்பட்டு வழி நடத்தப்பட்ட சிறுவர் இல்லங்கள் யுத்த மெனும் பேராசை அரக்கனின் அட்டூழியப் பார்வைக்கு மீண்டும் கடந்த மாதம் உள்ளாகிப் போனபேது இச் சிறார்களுக்கும் சொந்தம் தேடி அலையும் சோகக் கதை தொடர்ந்தது. இதனால் இப் பிரதேசங்களில் காணப்பட்ட சிறுவர் இல்லங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதுடன், அங்கு எல்லாம் அதுவாக வாழ்ந்த சின்னஞ் சிறுசுகள் மீண்டும் வெளியேற்றப்பட்டு நிர்க்கதி நிலைக்குத் தள்ளப்பட்டனர். இச் சந்தர்ப்பத்தில் சொந்த தேசத்தை இழந்து துயர வாழ்வை சுமந்து நிற்கதி தேடி அலையும் அற்ப சொற்ப சொந்தக் காரருடன் பலர் இணைக்கப்பட்டதுடன் சிறு அளவிலானோர் இராணுவ முகாம்களுக்கு அருகிலே அமைக்கப்பட்டிருந்த செட்டிபாளயம் இலண்டன் சிவன் கோயில் இல்லம், கல்லடி விதரி இல்லம், குருக்கள்மடம் பக்த வச்சாலா இல்லம் என்பவற்றுடன் இம் மாணவச் செல்வங்கள் தற்காலிகமாக இணைந்து கொண்டனர். இவர்களது திடீர் வருகை அங்கு ஆரம்பத்தில் இருந்த மாணவர்களுக்கே போதுமான அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் இருந்த போது மேலும் பல நெருக்கடிகளான உணவு, நீர் மலசல கூடம், இருப்பிடம், நாளாந்தச் செயற்பாடுகள் என்பன மிகவும் கீழ்த்தரமாக சென்றது. அத்துடன் விடுதலைப் புலிகளினால் அறிவிக்கப்பட்ட இராணுவ முகாமுக்கு 1 கிலோ மீற்றர் விலகி மக்களை செல்லுமாறு விடுத்த அறிவிப்பைத் தொடர்ந்து அனைத்துச் சிறுவர் இல்லங்களும் திடீரென முடக்கப்பட்டன.
இந்நிலையில் சொத்து சுகங்களையும், சொந்தம் கொண்டாட மனைவி, பிள்ளைகள், சுற்றயல் சூழலுடன் வாழ்ந்த 150,000 படுவான்கரை மக்கள் எதுவுமே அற்றவர்களாக வாழ்வைத் தொலைத்த நிலையில் பிரதேசத்தை விட்டு துரத்தி அடிக்கப்பட்ட நிலையில் பிறந்த முதற்கொண்டே அனாதை எனும் பெயருடன் வாழ்ந்த இச் சின்னஞ் சிறுசுகளும் தம்மிடமிருந்த கல்விச் செல்வத்தையும் தெலைத்தபடி சொந்த தேடி அறிந்து வாழ்விலும் இணைந்து வாழ தலைப்பட்டனர். இதனைக் கருத்தில் கொண்டு இலங்கையின் அனைத்துச் செயற்பாடுகளிலும் பங்காளியாகியுள்ள ஐரோப்பிய ஒன்றியம், இணைத் தலைமை நாடுகள், சர்வதேச தொண்டு அமைப்புக்கள், இலங்கை அரசாங்கம், விடுதலைப் புலிகள் போன்ற தரப்பினர்கள் உடனடியாக ஒரு முடிவுக்கு வர வேண்டியது இக்காலத்தின் உடனடித் தேவை என்பதை இம் மக்களின் துயர வாழ்வினூடே கண்டு கொள்ள முடியும்.
-
« படுவான்கரையை விட்டு கை நழுவிப் போன | இலங்கை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் - சார்பு நிலை. »
நிழல் தேடும் சிறுவர் இல்லங்கள்
@ 2007-05-24 – 10:27:46
0 Comments on நிழல் தேடும் சிறுவர் இல்லங்கள்
Recent posts
-
இலங்கை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் - சார்பு நிலை.
on Wednesday, 6. June, 2007 -
நிழல் தேடும் சிறுவர் இல்லங்கள்
on Thursday, 24. May, 2007 -
படுவான்கரையை விட்டு கை நழுவிப் போன
on Thursday, 24. May, 2007 -
தொலைக்காட்சி - ஓர் அறிமுகம்
on Sunday, 6. May, 2007 -
தொடர்பு சாதனங்கள் பற்றிய ‘புரிதல்`
on Sunday, 6. May, 2007 -
படைப்போம்.
on Sunday, 6. May, 2007
