Search blog.co.uk

Posts archive for: 6 May, 2007
  • தொலைக்காட்சி - ஓர் அறிமுகம்

    ஊடகம் பொதுசன ஊடகமாக பரிணமித்து சகல துறைகளிலும் ஊடறுத்து கணணி யுகத்தில் தனது செல்வாக்கை மேலும் வலுப்படுத்திக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில் குறிப்பிடத்தக்கதொரு இலத்திரனியல் ஊடகமாக விளங்கும் தொலைக்காட்சியின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றி அறிந்து கொள்ளவேண்டியது கட்டாயமானதாகும். அந்தவகையில் அது குறித்த அறிமுகத்தையே இங்கு தருகிறேன்.

    தொலைக்காட்சி ஒளிபரப்புச் சேவைக்கான காட்சிகளை அல்லது படங்களை (Visuals) ஓரிடத்திலுருந்து இன்னோர் இடத்திற்கு காற்றின் ஊடாக அனுப்ப முடியும் என்ற தத்துவத்தை 1883ம் ஆண்டு ஜேர்மனிய மாணவனான போல் நிப்கொப் (Paul nipkow) வெளியிட்டார். ஜோன் லொகிபேர்ட் (John logiebird) என்பவர் 1928ம் ஆண்டு இங்கிலாந்தில் BBC யின் (British Broadcasting Corporation)மத்திய அலைவரிசையைப் பயன்படுத்தி உலகின் முதலாவது கறுப்பு வெள்ளைத் தொலைக்காட்சிச் சேவையை ஆரம்பித்திருந்தார்.

    1936ல் BBC நிலையம் தினசரி நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப ஆரம்பித்தது. NTSC என்ற வர்ணத் தொலைக்காட்சி 1954ல் அமெரிக்காவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதுவே உலகின் முதலாவது வர்ணத்தொலைக்காட்சி ஒளிபரப்புச் சேவையாகும். அதனைத் தொடர்ந்து 1970களில் உலகின் பல நாடுகளிலும் தொலைக்காட்சி அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

    உலக நாடுகள் பலவற்றிலும் தற்போது கம்பியில்லா தொலைக்காட்சிச் சேவை, ‘கேபிள்’ தொலைக்காட்சிச் சேவை, செய்மதி தொலைக்காட்சி மீள் ஒளிபரப்புச் சேவை என பலவகையான ஒளிபரப்புச் சேவைகள் நடாத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒளிபரப்புக்குத் தேவையான ‘அன்ரெனா’க்களை (Antenna) பொருத்தி ஒளிபரப்புச் செய்வது ஒருவகையாகும். இன்னொரு முறையான செய்மதிகள் (Satellite) மூலமும் ஒளிபரப்புச் சேவைகள் நடாத்தப்பட்டு வருகின்றன.

    தொலைக்காட்சிச் சேவைகள் நவீன முறைகளில் அபிவிருத்தியடைந்து காணப்படுவதால் இந்த ஊடகம் முக்கியமான வளர்ச்சிக் கட்டத்தை அடைந்துள்ளது. தற்போது ‘இன்ரநெற்’ (Internet) மூலம் தகவல் பரிமாற்றமும், செய்மதிகள் ஊடாக மகாநாடுகளும் நடைபெறுவதால் தகவல் தொடர்பு ஊடகம் ஒரு வளர்ச்சியடைந்த நிலையை எய்தியுள்ளது.

    அண்மைக் காலங்களில் தொலை பேசியில் பேசுபவரைக் கூட நேரடியாகப் பார்த்துப் பேசக் கூடிய வகையில் தொழில் நுட்ப சேவைகள் வளர்ச்சியடைந்துள்ளன. தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தெரிவு செய்து பார்க்கக் கூடியதாகவும் தொலைக்காட்சிச் சேவைகள் அமைந்துள்ளன. நாம் பார்க்கும் நகழ்ச்சிகளில் எமது உருவத்தைப் புகுத்தி அந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சியில் பார்க்கக் கூடியதாகவும் நவீன ‘இன்ரக்ரிவ் ரி.வி.’ (Interactive T.V.) முறைகள் அமைந்துள்ளன.

    இவையெல்லாம் ‘கம்பியுஸ்ரீட்டரின்’ (Computer) அறிமுகத்தால் தொலைக் காட்சியில் ஏற்பட்டுள்ள வியத்தகு அபிவிருத்திகளாகும். ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள் ஒன்றிணைந்து இதுபோன்ற நவீன உபகரணங்களை தயாரித்து விநியோகித்து வருகின்றன. இந்த நவீன தொழில் நுட்பங்களினால் தொலைக் காட்சிக்கும் மனிதர்களுக்கும் இடையிலான தொடர்பு மிகவும் நெருங்கி விட்டது.

    தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், புதிய சினிமா படங்கள், ‘வீடியோ’ காட்சிகள் வரை அனைத்தையுமே இல்லங்களில் உள்ள கணணிகளில் காணக்கூடிய நாளும் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அவற்றினை இணையத்தினூடாக பார்க்கக்கூடிய ஆரம்ப முயற்சிகளை செய்வதில் சர்வதேச புகழ் வாய்ந்த ‘வெப்சைட்’ நிறுவனங்களாகிய ‘யாகூ’, ‘ஏ.ஓ.எல்.’, ‘மைக்ரோ சொப்ட்’, ‘கூகுள்’ ஆகிய நிறுவனங்கள் தீவிரமாக இறங்கியுள்ளன.

    அமெரிக்கா, ஜப்பான் போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் 65க்கும் மேற்பட்ட அலைவரிசைகளில் தொலைக்காட்சிச் சேவைகள் நடைபெறுகின்றன. அமெரிக்காவில் மட்டும் ‘கேபிள்’ தொலைக்காட்சிச் சேவைகளோடு சேர்த்து 500க்கும் மேற்பட்ட தொலைக்காட்சிச் சேவைகள் நடைபெறுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

    தொலைக்காட்சி ஒளிபரப்பின் போது, பொருள்களின் உருவங்களும் படங்களும் நிகழ்ச்சியின் படங்களும் உருவங்களும் ஒளிபரப்பப்படும் அதே சமயத்தில் ஒலியும் ஒலிபரப்பப்பட வேண்டும். ஆகவே, படங்களும் உருவங்களும் மின்னலைகளாக மாற்றப்படுகின்ற அதே சமயத்தில் ஒலி அலைகளும் மின்னலைகளாக மாற்றப்பட்டு இவை இரண்டுமே ஒரே அன்ரெனா (Antenna) வழியாக ஒளி – ஒலிபரப்பப்பட்டு தாங்கி அலைகள் மூலம் சுமந்து செல்லப்பட்டு ஏற்குமிடத்தில் வான் கம்பிகளில் மோதி மீண்டும் ஒளியாகவும் ஒலியாகவும் தொலைக்காட்சிப் பெட்டிகளில் மாற்றப்பட்டு தொலைக்காட்சித் திரையில் காட்சிகளையும் அவற்றிற்குரிய ஒலிகளையும் தருகின்றது.

    அதனால் தொலைக்காட்சி எனும் வெகுஜன ஊடகம் மனித தேடல்களில் ஆதாரமாக அமையும் குரலொலி (Voice), தரவுகள்(Data), ஒளியுரு (Video) ஆகிய மூன்று முக்கியமான தொடர்பு முறைகளைக் கைக்கொண்டு கட்புல (ஒளி) செவிப்புல (ஒலி) சாதனமாக செயற்பட்டு சமூகத்தில் அதிக தாக்கத்தினை ஏற்படுத்திவருகின்றது.

    எஸ். மோசேஸ்.

  • தொடர்பு சாதனங்கள் பற்றிய ‘புரிதல்`

    தொடர்பு சாதனங்கள் பற்றிய புரிதல் மக்களிடத்தில் தெளிவாக இருக்க வேண்டும். இல்லையேல் அவை மக்களை தம் வழி ஈர்த்து எங்கேயோ கொண்டு சென்றுவிடும். அதனை தெளிவுறுத்துவதாகவே இக்கட்டுரை அமைகிறது..

    இன்றைய மனித சமுதாயத்தில் எமது வாழ்வோடு மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பவை தகவல் தொடர்பு சாதனங்களாகும். இவ்வகையில் வெகுஜன தொடர்பு சாதனங்களாக பத்திரிகைகள், புத்தகங்கள், சஞ்சிகைகள் போன்ற அச்சு சார்ந்த ஊடகங்களையும் வானொலி, தொலைக்காட்சி, கணணி, சினிமா போன்ற இலத்திரனியல் சார் ஊடகங்களையும் கூறிக்கொள்ளலாம். இவ்வாறான தொடர்பு சாதனங்கள் ஒருவித சமூக அமைப்பை கட்டிக்காப்பதில் மிகவும் வலிமையாகச் செயற்படுகின்றன.

    இவை மேலைத்தேய நாடுகளைப் போலவே கீழைத்தேய நாடுகளிலும் மிகுந்த தாக்கம் செலுத்தி வருவதனை காணமுடிகிறது. இவ்வகையில் வெகுஜனத் தொடர்பு சாதனங்கள் சமூகத்தில் பல்வேறுபட்ட பணிகளை ஆற்றி வருகின்றன. அவற்றில் தகவல்களை அளித்தல் பொழுது போக்கு எனும் வழக்கமான பணிகளையும் மீறி பொதுக்கருத்தை உருவாக்குவதிலும் முக்கிய பங்காற்றுகின்றன.

    இருபத்தொராம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் பொறியினை அழுத்தித் தொழில் புரியும் நவீன உலகின் தன்மைக்கேற்ப எமது வாழ்க்கை முறைகளையும் மாற்றியமைத்துக் கொள்வது அவசியமாகும். அவ்வாறாக செயற்படும் போது தொடர்பு சாதனங்களானது நமது வாழ்க்கையில் எப்படியோ நுழைந்து விடுகின்றன. எனவே, நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவற்றை பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றோம். ஆகவே, தொடர்பு சாதனமானது சமூகமயமாக்கம், சமூகமாற்றம் என்பவற்றில் மிகுந்த செல்வாக்கினைச் செலுத்துகின்றன.

    இச்சாதனங்கள் மூலம்தான் அரசியல், பொருளாதாரம், மனித நடவடிக்கைகள் என பல்வேறு விடயங்கள் சமூகத்தளத்தில் அலசப்படுகின்றன. அந்த வகையில் இச்சாதனங்கள் மக்களின் பொதுமன்றமாக ஜனநாயக அடிப்படைகளுள் ஒன்றாக செயற்படுகின்றன. அத்தோடு பல்வேறு விதமான தனிமனித மதிப்பீடுகளை உருவாக்குவதிலும், நிலை நிறுத்துவதிலும், நமது நடையுடை பாவனைகள், பேச்சு, உறவுமுறைகள் போன்றவற்றிலும், நமது நேரத்தை தீர்மானிப்பதிலும் இவற்றின் பங்கு குறிப்பிடத்தக்கவைகளாகும். அந்த வகையில் இத்தொடர்பு சாதனங்களின் பன்முகத்தாக்கம் அல்லது செல்வாக்கு உலகளாவிய ரீதியில் அனைத்து சமூகத்திலும் காணப்படுகின்றது.

    பெருகிவரும் புதிய தொழில் நுட்பங்கள் மூலம் நினைத்தவுடன் அதே கணத்தில் செய்திகளையும் தகவல்களையும் அச்சாகவும் விம்பங்களாகவும எங்கு வேண்டுமானாலும் அனுப்பவும் பெறவும் முடிகிறது. தொடர்பூடகங்களானது உலகத்தை ஒன்றிணைத்து ஒரு கிராமமாக மாற்றி உலக சந்தைகளை உலக கலாசாரத்தை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிக்கின்றன.

    மிக அதிகளவில் தொடர்பு சாதனங்கள் நம் வாழ்வில் ஊடுருவியிருக்கின்றன. செல்வந்தர்கள், வறியவர்கள், அந்தஸ்தில் உயர்ந்தவர்கள், படித்தவர்கள், பாமரர்கள் போன்ற வேறுபாடுகளின்றி அனைவருமே பயன்படுத்துகின்றனர். வாழ்க்கை முறைமையிலிருந்து பிரிக்க முடியாத அம்சமாகிவிட்டது. இருந்த போதிலும் அந்தந்த சமூகத்தின் தன்மைகளுக்கும் கட்டமைப்புகளுக்கும் ஏற்ப இவற்றின் செல்வாக்கு மாறுபடுகின்றன.

    விரும்பியோ விரும்பாமலோ பயன்படுத்த வேண்டிய கட்டாயச் சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ள மனிதனுக்கு பல்வேறுபட்ட விடயங்களை இடித்துரைக்கும் ஆற்றல் வாய்ந்த தொடர்பு சாதனங்கள் மக்களின் மனங்களை அசைய வைப்பதோடு சிதைய வைக்கும் தன்மையும் கொண்டவை. நம்மைப்பற்றி மற்றவர்களைப்பற்றி சமூகத்தைப்பற்றி ஏராளமான தரவுகளையும் தகவல்களையும் அறிவிப்பது மட்டுமன்றி அறிவுறுத்தும் ஆற்றலும் வாய்ந்த தொடர்புசாதனத்துறை தனிப்பெருந்துறையாக வளர்ச்சி கண்டுள்ளது. அதனால் சமூகத்தின் பல்வேறுபட்ட மட்டங்களிலும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்துவதோடு, தீர்மானங்களை முன்மொழியும் பாரிய சக்தியாகவும் விளங்குகின்றது.

    ஒப்பீட்டளவில் பார்க்கும் போது இத்தொடர்பு சாதனங்களுள் தொலைக்காட்சி முக்கியமானதொரு இடத்தினைப் பெறுகின்றது. ஏனைய தொடர்பூடகங்களைப் போலன்றி குரலொலி (Voice), தரவுகள் (Data), ஒளியுரு (Video) ஆகிய மூன்று முக்கியமான தொடர்பு முறைகளைக் கைக்கொண்டு கட்புல (ஒளி) செவிப்புல (ஒலி) சாதனமாக செயற்பட்டு சமூகத்தில் அதிக தாக்கத்தினை ஏற்படுத்துவது இதுவேயாகும்.

    சமூகநிலையில் சகலர் மீதும் இச்சாதனங்கள் மிகுந்த தாக்கத்தினை ஏற்படுத்தி பாதிப்பினை உண்டுபண்ணுகின்றன. பல்வேறுபட்ட விடயங்களையும் இலகுவில் உள்வாங்கி மக்கள் மத்தியில் வெளிப்படுத்துவதால் அவர்கள் பல்வேறுபட்ட சிக்கல்களுக்கும் முரண்பாடுகளுக்கும் பிரச்சனைகளுக்கும் உள்ளாக வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

    இன்றைய சூழலில் பல தொலைக்காட்சி அலைவரிசைகள் ஏட்டிக்குப் போட்டியாக பல்வேறுபட்ட நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றன. அறிவியல் சார்ந்த பயனுள்ள நிகழ்ச்சிகள் சில ஒளிபரப்பப்படுகின்ற போதிலும் வர்த்தக நோக்கம் கருதிய நிகழ்ச்சிகளே மிகவும் அதிகமாக ஒளிபரப்பாகின்றன. அவை பெரும்பாலும் மக்களை இலகுவாகக் கவரும் களிப்பூட்டல் (Entertainment) நிகழ்ச்சிகளாகவே காணப்படுகின்றன. இவற்றில் அதிகமானவை உண்மைக்குப் புறம்பான மாயலோக காட்சிகளைக் கொண்டமைந்ததாகவும், யதார்த்தத்திற்கு மாறான தீர்மானங்களை காட்டுவதாகவும், வன்முறை, பலாத்காரம் நிறைந்ததாகவும் அமைந்துள்ளன.

    இதன் விளைவாக மக்கள் தவறான நடத்தை முறைகளைக் கைக்கொள்ளவும் தவறான தீர்மானங்களை தேர்ந்தெடுக்கவும் வழிவகுக்கின்றன. குறிப்பாக சமூகத்தில் கொலை, கொள்ளை, தற்கொலை, பாலியல் பலாத்காரம், வன்முறைகள், போதைப் பொருள் பாவனை போன்ற சமூகப்பிறழ்வுகள் உருவாகுவதற்கும் உடல் உளரீதியான பாதிப்பு, உறவுநிலை ரீதியான பாதிப்பு, பிற நாகரீகத் தாக்கம், பிற பண்பாட்டுத்தாக்கம், பொருளாதார ரீதியான பாதிப்பு, பால்நிலை ரீதியான பாதிப்பு என்பவைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியும் உள்ளனர்.

    சாதாரணமாக மக்கள் தமக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெறுவதற்கு அல்லது தீர்மானங்களை தேர்ந்தெடுப்பதற்கு மற்றவர்களை நாடுகின்றனர். அது நிறைவேறாத போது பெரியவர்கள் அல்லது துறைசார் அறிஞர்களிடம் கலந்தாலோசிக்காது ஊடகங்களினூடாக குறிப்பாக தொலைக்காட்சியில் தாம் கண்ட கேட்ட விடயங்களைக் கொண்டே தீர்மானங்களை எடுக்கின்றனர். பல சமயங்களில் அவை தமது சமூக சூழலுக்கும் நடத்தைகளுக்கும் பொருந்தாதவைகளாக அமைந்து விடுகின்றன. அதனால் இவர்கள் மென்மேலும் சிக்கல்களுக்குள் தள்ளப்படுகின்றனர்.

    உலகலாவிய ரீதியில் நோக்கும் போது வெகுஜன தொடர்பூடகங்கள் தமக்கென தனித்துவமான இடத்தினை பெற்றிருப்பதோடு பல்வேறுபட்ட துறைகளிலும் தமது செல்வாக்கினையும் செலுத்தி வருகின்றது. இதன் காரணமாக அதனது போக்குகளும் தன்மைகளும் சமூகத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றன.

    ஆகவே இவ்வாறானதோர் சூழலில் மக்கள் உகந்தவற்றை பின்பற்றவும் ஏனையவற்றை அதன் தன்மைகளுக்கேற்ப ஏற்றுக்கொள்ளவும் அல்லது புறந்தள்ளவும் தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது இத்தொடர்பு சாதனங்கள் குறித்த புரிதல் மக்கள் மத்தியில் தெளிவாக ஏற்பட வேண்டும். அதே போன்று இத்துறையில் பணியாற்றுபவர்களும் சமூக அறத்தை அறிந்து அவற்றின் அடிப்படையில் கடமையாற்ற வேண்டியவர்களாக உள்ளனர். இல்லையேல் பல்லின, மொழி, மதத்தினர் வாழும் இலங்கை போன்ற நாடுகளில் இச்சாதனங்களால் குழப்பங்களும் கலவரங்களும் தோன்றி அழிவுகளும் சீர்கேடுகளும் மேலோங்கிவிடும்.

    எஸ். மோசேஸ்.

  • படைப்போம்.

    இலக்கியங்கள், வரலாறுகள் படைக்கப்படுகின்றன. அவற்றிற்காக எவரும் விட்டுக் கொடுக்கவேண்டும் எதனையும் இழக்கவும் வேண்டும் என்றில்லை.
    யாரையும் யாரும் வற்புறுத்தவோ கட்டுப்படுத்தவோ கூடாது என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்துகொள்ளவேண்டும்.
    அதனால் இந்தப் பக்கத்தில் விட்டுக்கொடுக்க எண்ணமில்லாத எல்லோரும் எழுதலாம்.

Footer:

The content of this website belongs to a private person, blog.co.uk is not responsible for the content of this website.